பெங்களூருவில் உள்ள தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பிரேர்ணா (27) என்ற பெண், அதே கடையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த கிரண் என்பவரை ஒரு வருடத்திற்கு மேலாகக் காதலித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக கிரண் தன்னை முறையாகக் கவனிக்கவில்லை என்றும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும் பிரேர்ணா சந்தேகமடைந்துள்ளார். தன்னை அவர் புறக்கணிப்பதாகக் கருதிய பிரேர்ணா, கிரணுக்குப் பாடம் புகட்ட ஒரு பயங்கரமான முடிவை எடுத்தார்.
திட்டமிட்டபடி, கிரணைத் தனது வீட்டிற்கு வரவழைத்த பிரேர்ணா, அவருக்கு ஒரு வித்தியாசமான முறையில் ‘ப்ரோபோஸ்’ (Propose) செய்யப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய கிரணின் கண்களைத் துணியால் கட்டி, அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து கைகளையும் சேர்த்து கட்டியுள்ளார். கிரண் நிலைகுலைந்து அமர்ந்திருந்த வேளையில், திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்ததோடு நிறுத்தாமல், கிரண் தீயில் கருகி உயிரிழப்பதைப் பிரேர்ணா தனது செல்போன் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்து பார்த்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிரணின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேர்ணாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
