மரணத்தை வென்ற சிறுமி..ஏழு பேரின் உடலில் உயிராக வாழ்கிறாள்… கோவை உலுக்கிய நெகிழ்ச்சி சம்பவம்..!

By Muthu Mani on மாசி 26, 2026

Spread the love

கோவையைச் சேர்ந்த 8 வயது சிறுமி வெண்பா, உயிரிழந்த நிலையிலும் தனது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூகத்தில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் சுயநினைவிழந்த வெண்பா, கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைப் பலனின்றி, பிப்ரவரி 25-ம் தேதி சிறுமிக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தனது மகள் மீளமாட்டாள் என்ற வேதனையான சூழலிலும், அவளது உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர் வாழட்டும் என்ற உன்னத நோக்கில் அவளது பெற்றோர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் வெண்பாவின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

   

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் இதர உறுப்புகள் கோவையிலுள்ள இதர தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன. இந்தச் சிறுமியின் உடல் உறுப்புகள் மூலம் 7 பேரின் வாழ்வு ஒளிபெற்றுள்ளது.

   

இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டியுள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி, வெண்பாவின் குடும்பத்தினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அரசு விதிமுறைகளின்படி மாவட்ட வருவாய் துறையினர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மரணத்திற்குப் பின்னும் பிறருக்கு வாழ்வளித்த சிறுமி வெண்பாவின் தியாகம் கோவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.