திருமணம் முடிந்த ஓருசில ஆண்டுகளிலேயே தம்பதியிடையே ஏற்பட்டக் கருத்துவேறுபாடு காரணமாக, மனைவி கணவருடன் சண்டையிட்டுத் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கணவன், மனைவியின் அனுமதியின்றி ரகசியமாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து ஒருசில மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளான். இச்செய்தி மனைவியின் காதுகளுக்கு எட்டியதும், அவர் உடனடியாகத் தனது பெற்றோர் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்கு விரைந்து வந்து, தன் கணவனிடம் இரண்டாவது மனைவியை எங்கே ஒளித்து வைத்துள்ளாய் எனக் கேட்டுச் சண்டையிட்டுத் தேடத் தொடங்கினார்.
கணவன் அந்தப் பெண்ணைச் சமையலறையில் ஒளித்து வைக்க முயற்சி செய்தபோதிலும், வீடு முழுவதும் தேடிய மனைவி இறுதியில் சமையலறையில் இருந்த அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, “என்னுடைய பொருட்களை எல்லாம் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள், இச்செயலுக்காக நான் உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கப்போகிறேன்” என்று உறுதியாகத் தெரிவித்தார். ஆனால், கணவனோ அப் பொருட்களைத் தர மறுத்து, “இவை இனி உன்னுடையது அல்ல, எங்களுடையது” என்று வாதிட்டான்.
மேலும், தான் இரண்டாவதாகத் திருமணம் செய்து அழைத்து வந்த பெண்ணைத் தனது சொந்தக்காரரின் மகள் என்று பொய் கூறிய கணவன், “தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துகொள், இவள் என் உறவினர் பெண், இவளை நாங்கள் எங்களுடனேயேதான் வைத்துக் கொள்வோம்” என்று கூறி மனைவியை மிரட்டும் தொனியில் பதிலளித்தான்.
