பெற்ற மகனையே தந்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்து, ஆற்றில் வீசிய கொடூரச் சம்பவம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வேந்தர் பாலா என்பவருக்கும், அவரது மகன் ஸ்ரீகாந்திற்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாகவே கடுமையான பகை இருந்து வந்துள்ளது. பாலாவின் தவறான நடத்தை மற்றும் குடும்பத்தைப் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட இந்த மோதல், பலமுறை கைகலப்பாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த விரோதத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த தந்தை பாலா, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சமாதானமாகப் பேசலாம் என்று கூறி தனது மகன் ஸ்ரீகாந்தை வயல்பட்டி என்ற பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு பாலாவின் நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே மறைந்திருந்தனர். அங்கு வைத்து மதுபோதையில் இருந்த மூவரும் சேர்ந்து, ஸ்ரீகாந்தை துணியால் கட்டிப்போட்டு கசாப்புக் கடையில் பயன்படுத்தும் அரிவாளால் பாறையின் மீது வைத்து துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக ஸ்ரீகாந்தின் உடல் பாகங்களை முல்லைப் பெரியாற்றில் வீசிவிட்டு, எதுவும் தெரியாதது போல் அவர்கள் தங்களது வழக்கமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், வெளியில் சென்ற மகன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தாய் ராஜலட்சுமி, தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் போலீசார் காணாமல் போன வழக்காகப் பதிவு செய்து விசாரித்த நிலையில், கணவர் பாலா மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி ராஜலட்சுமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை தீவிரமடைந்தது. சிபிசிஐடி போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தந்தை வேந்தர் பாலாவும் அவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியனும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான கருப்பசாமியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
