மும்பையில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 20 வயது இளம்பெண் தனது தந்தையாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த அதிர்ச்சித் தகவல் டிஎன்ஏ (DNA) பரிசோதனை மூலம் அம்பலமாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பேசும் திறன் இல்லாததால், குற்றவாளிகளைக் கண்டறிவதில் போலீசாருக்கு ஆரம்பத்தில் பெரும் சவால் நிலவியது.
இருப்பினும், காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உட்பட 16 பேரின் டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரித்துத் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஜனவரி 27 அன்று வெளியான தடயவியல் முடிவுகள், 48 வயதான அவரது தந்தையின் டிஎன்ஏ-வுடன் ஒத்துப்போனதை அடுத்து அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அந்தப் பெண் சைகை மொழியில் அடையாளம் காட்டிய 16 வயது சிறுவன் மற்றும் 32 வயது நபர் ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தந்தையின் கொடூரமும் உறுதியாகியுள்ளது.
