ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்த 28 வயதான மீனவர் களஞ்சியம், கடலில் மீன் பிடித்துவிட்டு முன்தினம் வீட்டிற்குத் திரும்பினார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, மோட்டார் இயங்கவில்லை. அதனால் மின் ஒயரைச் சரி செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி களஞ்சியம் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகன் களஞ்சியம் இறந்த அதிர்ச்சியையும் துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது தந்தை சேகர் (55) மிகுந்த சோகமடைந்தார். இந்த மனவேதனையில் வீட்டுக்குச் சென்ற சேகர், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் சேகர் தூக்கில் தொங்கியதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் போலீசார், களஞ்சியம் மற்றும் சேகரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
