“குழந்தை முகத்தை கூட சரியா பாக்கலையே..” குழந்தையை பார்க்க வந்த தந்தை… கதறும் குடும்பம்… வாடிப்பட்டியில் அரங்கேறிய கொடூரம்…!!

By Gayathri on ஆவணி 12, 2026

Spread the love

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த டி.ஆண்டிப்பட்டி பங்களாவைச் சேர்ந்த மணிகண்டன், பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் பிறந்த தனது இரண்டாவது பச்சிளம் பெண் குழந்தையை நேரில் காண சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர், அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயந்திபுரத்தில் நடந்த சரவண பாண்டியன் கொலை வழக்கில் மணிகண்டனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்கில் கைதாகி நீதிமன்றப் பிணையில் அவர் வெளியே வந்திருந்ததால், ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

   

இதற்கிடையே, தங்களை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த அருண்பிரபு மற்றும் தினேஷ் கண்ணன் ஆகிய இருவர் காவல் நிலையத்தில் தாமாகவே முன்வந்து சரணடைந்தனர். இவர்களில் தினேஷ் கண்ணன், முன்பு கொலை செய்யப்பட்ட சரவண பாண்டியனின் நெருங்கிய பள்ளி நண்பர் ஆவார். இதனால், நண்பனின் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவே மணிகண்டன் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆசையாக குழந்தையை பார்க்க வந்த தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.