மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சோனு, ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்திலுள்ள புலோரோ கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி போபாலில் உள்ள சோனுவுடன் வசிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் போபாலுக்குச் சென்று அவரைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் வலுக்கட்டாயமாகத் தங்களது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கே அழைத்துச் சென்றனர்.
அதன்பின்னர், அந்தப் பெண் தொலைபேசி வாயிலாக சோனுவைத் தொடர்பு கொண்டு, தன்னைச் சந்திக்க ராஜஸ்தானுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த அழைப்பை நம்பி புலோரோ கிராமத்திற்குச் சென்ற சோனுவை, அப்பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு கடத்திச் சென்று ஒரு வீட்டில் சிறை வைத்தனர். அங்கு சோனு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். அவர் மீது உடல்ரீதியான வன்முறை நடத்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் அவரை அவமானப்படுத்தும் விதமாக சோனுவை சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தி, அதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
அதன்பின்னர், அந்தக் கொடூரமான செயல்களைப் படம்பிடித்த வீடியோவை, போபாலில் உள்ள சோனுவின் குடும்பத்தினருக்கு அந்த கும்பல் அனுப்பி வைத்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக கோலார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்த கோலார் காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினர். மேலும், கடத்தப்பட்ட சோனுவைப் பத்திரமாக மீட்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் ராஜஸ்தான் காவல்துறையினருடன் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
