தமிழக அரசுப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பதவிகளுக்கான பதவி உயர்வு வழங்கும்போது பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் முன்னுரிமைப் போட்டிகளால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனாலேயே தகுதியானவர்களைத் தேர்வு செய்து பணியிடங்களை நிரப்புவதில் சட்ட ரீதியான சிக்கல்கள் நீடித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவும் ஒரு முக்கிய தடையாக உள்ளது. ஆசிரியர்களின் நலனைக் கருதி, தற்போது பணியில் இருப்பவர்களுக்காக மட்டும் 2026-ல் மூன்று முறை சிறப்புத் தகுதித் தேர்வுகளை நடத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டப் போராட்டங்களை விரைந்து முடித்து, விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகக் கல்வித்துறை உறுதியளித்துள்ளது.
