இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதுகாப்பான சேமிப்பாகக் கருதும் தங்கத்தை, அரசு வாங்க போவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள நிலேஷ் ஷா என்பவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களிடம் இருக்கும் சுமார் 35,000 டன் தங்கத்தை அரசு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், இது அவருடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும், மத்திய அரசு இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை என்றும் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெளிவுபடுத்தியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று திடீரெனத் தங்கம் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று மக்கள் அஞ்சுவதாகக் குறிப்பிட்ட ஆனந்த் சீனிவாசன், இத்தகைய திட்டங்கள் நடைமுறைக்கு வருவது கடினம் என்று கூறியுள்ளார்.
வங்கிகளில் நிலையான வட்டி விகிதம் குறைவாக இருப்பதாலேயே மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாகவும், இப்படி கட்டாயப்படுத்தித் தங்கத்தைப் பிடுங்கும் சூழல் ஏற்பட்டால் மக்கள் அதை மறைத்து வைப்பார்களே தவிர அரசிடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கத் தங்க இறக்குமதிக்கு வேண்டுமானால் தடை விதிக்கலாமே ஒழிய, பொதுமக்களின் சேமிப்பில் கைவைப்பது முறையல்ல என்பதே அவரது கருத்தாகும்.
