70 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…3 ஆண்டுகளுக்குப் பின் தென்காசி வழக்கில் வெளியான அதிரடி தீர்ப்பு…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு அரங்கேறிய கொடூர இரட்டை கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேக்கரை கிராமத்தில் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததோடு, அதனைப் பார்த்த அவரது பேரனையும் அடித்துக் கொன்ற வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

   

கடந்த 2022 ஜூலை 11-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நாளன்று இரவு, மேக்கரை கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சைத்தான் பீவி என்ற மூதாட்டி வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த முகம்மது காசிம் (19) என்ற வாலிபர், மூதாட்டியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கோரத் தாக்குதலில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வெளியில் எடுத்துச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த அவரது பேரன் காஜீர் அலி இருட்டில் “யார் அது?” என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி முகம்மது காசிம், அருகில் கிடந்த மரக்கட்டையால் காஜீர் அலியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

 

இந்த இரட்டை கொலை குறித்து அச்சன்புதூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளி முகம்மது காசிமை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராஜவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து சாட்சிகள் மற்றும் மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.