இந்தியாவில் தெரு நாய்கள் குறித்த விவாதங்கள் ஒருபுறம் காரசாரமாக நடைபெற்று வரும் வேளையில், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தீர்குலா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மனிதநேயத்தையும், நன்றியுணர்வையும் நெகிழ்ச்சியுடன் பறைசாற்றியுள்ளது. அங்குள்ள மழலையர் பள்ளியில் சுமார் 30 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு கொடிய விஷப்பாம்பு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. இதைக் கண்ட ‘காளி’ என்ற பெயர் கொண்ட அந்தத் தெருநாய், குழந்தைகளைக் காக்கத் துணிச்சலுடன் பாம்புடன் மல்லுக்கட்டியது. பாம்பின் கொடிய விஷம் வாய் மற்றும் முகத்தில் ஏறிய போதிலும், குழந்தைகளைத் தீண்டவிடாமல் அந்தப் பாம்பைக் கொல்லும் வரை காளி ஓயவில்லை. இறுதியில் பாம்பைக் கொன்று 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் தியாகி, சிறிது நேரத்திலேயே விஷம் தலைக்கேறி தனது உயிரைத் துறந்தது.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவ, அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. தங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றிய அந்த வாயில்லா ஜீவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காளிக்கு மனிதர்களுக்குச் செய்வது போன்றே முறைப்படியான இறுதிச் சடங்குகளைச் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கண்ணீர் மல்க விடைகொடுத்தனர். உயிரைக் கொடுத்து நன்றிக் கடனைத் தீர்த்த காளியின் இந்தத் தியாகம், அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, தெரு நாய்கள் மீதான அன்பையும் மரியாதையையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
