“குதிரை பேரத்திற்கு இடமில்லை” திமுக -அதிமுக இணைந்து ஆட்சியமைக்கலாம்… ஆளுநர் போட்ட குண்டால் பற்றி எரியும் அரசியல்..!!

By Soundarya on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் அதற்கு இல்லை. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “விஜய் தவிர பெரும்பான்மையை நிரூபிக்கும் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரலாம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் யாரையும் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளிப்பது சட்டரீதியாகச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், அது பின்னாளில் ‘குதிரை பேரத்திற்கு’ வழிவகுக்கும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுகிறது. மைனாரிட்டி அரசு அமைவதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள ஆளுநர், ஒருவேளை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேவையான பெரும்பான்மையை நிரூபித்தால், அவர்கள் ஆட்சி அமைக்கத் தயாராக இருந்தால் அதைப் பரிசீலிக்கலாம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

இந்தச் சூழலால் தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பரம்பரை எதிரிகளான திமுக மற்றும் அதிமுக கைகோர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து 118 இடங்களை எட்டிப் பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரகசிய ஆலோசனைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த கண்டிப்பான நிலைப்பாடு விஜய்யின் முதலமைச்சர் கனவுக்குத் தற்காலிக முட்டுக்கட்டையாக அமைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.