தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மற்றும் பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஒருபோதும் இணையாது எனத் திருமாவளவன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது வரும் தேர்தலில் விசிக-வை தங்கள் பக்கம் இழுக்கலாம் என எதிர்பார்த்திருந்த ராமதாஸ் தரப்புக்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கதவை அடைத்திருப்பது, ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய பேசுபொருளாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் மற்றும் புதிய கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
