நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கல்லட்டி அண்ணா நகர் குடியிருப்பு பகுதிக்கு, முதுகில் ஜிபிஎஸ் கருவியும் கால்களில் எண் குறியிடப்பட்ட அடையாளமும் கொண்ட வித்தியாசமான கழுகு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அது வேறு எங்கிருந்தோ தங்களைக் கண்காணிக்க வந்திருக்குமோ என்ற அச்சத்தில் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதகை வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அது பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி என்ற ஆராய்ச்சி நிறுவனத்தால் மும்பையில் வளர்க்கப்பட்டு, அதன் நடமாட்டத்தை ஆராய்வதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு பறக்கவிடப்பட்ட “பிணந்தின்னிக் கழுகு” என்பது உறுதி செய்யப்பட்டது.
வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கழுகு, நீண்ட நேரமாக குடியிருப்பு பகுதியிலேயே தங்கியதோடு, ஒருகட்டத்தில் வானில் உயரமாகப் பறந்துவிட்டு மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பியது. இந்த அரிய வகை கழுகு ஏற்கனவே முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் சுற்றித்திரிந்து, எப்பநாடு கிராமத்தைக் கடந்து தற்போது அண்ணா நகர் பகுதிக்கு வந்துள்ளது. இதனால், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து, ஜிபிஎஸ் கருவியுடன் தங்கியிருக்கும் அந்தப் பிணந்தின்னிக் கழுகைப் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட வேண்டும் என்று வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, அண்ணா நகர் சாலை ஓரத்தில் இருந்த ஒரு டீ கடையின் அருகே வந்து அமர்ந்த அந்த கழுகின் அருகில் சென்று, கிராம மக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்து ரசித்தனர். இருப்பினும், கழுகிற்கு எந்தவிதமான இடையூறும் செய்ய வேண்டாம் என்று கிராம மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வனத்துறையினர், அந்தக் கழுகின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
