“ரூ.500 ஓய்வூதியத்திற்காக” 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து பல கிலோ மீட்டர் நடந்த மருமகள்… இப்படியொரு மருமகளா..? சமூக வலைதளங்களை உலுக்கிய பாசப் போராட்டம்..!!

By Soundarya on வைகாசி 25, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில், 90 வயதான முதியவர் ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.500-ஐப் பெறுவதற்காக, அவருடைய மருமகள் அவரைத் தன் முதுகில் சுமந்து கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வங்கிக்கு நடந்து சென்ற நெகிழ்ச்சியான மற்றும் வேதனையான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுக்மினியா என்ற அந்தப் பழங்குடியினப் பெண்மணி, தனது மாமியார் சோன்வாரியை முதுகில் சுமந்தபடி சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 3 முதல் 5 கிலோமீட்டர் வரை நடந்து சென்றுள்ளார். இவர்களின் கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடை காரணமாக அங்கு வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும், கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதியம், வங்கியின் கே.ஒய்.சி (KYC – வாடிக்கையாளர் விவரங்கள் அறிதல்) நடைமுறைகள் முழுமையடையாத காரணத்தால் நிறுத்தப்பட்டிருந்தது.

   

இதற்கு முன்பு ‘வங்கி மித்ரா’ (வங்கி உதவியாளர்) மூலம் முதியவரின் இல்லத்திற்கே நேரடியாக ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த கே.ஒய்.சி சிக்கலால் கடந்த 3 முதல் 4 மாதங்களாகப் பணம் வராததால், வேறு வழியின்றி சுக்மினியா இந்த கடினமான முடிவை எடுத்தார். வங்கிக்கு வந்தவுடன் அதிகாரிகள் உடனடியாகப் படிவங்களைப் பூர்த்தி செய்து, நிலுவையில் இருந்த ரூ.1,500 – ரூ.2,000 தொகையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இனி வரும் காலங்களில் முதியவர் வங்கிக்கு வரத் தேவையில்லை என்றும், இல்லத்திற்கே பணம் தேடி வரும் என்றும் வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.