செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் “யார் கெத்து?” என்ற அதிகாரப் போட்டியில் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் தீபக் ஆகியோருக்கு இடையே கஞ்சா விற்பனை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தீபக் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்லாவரம் அருகே மறைந்திருந்த ஆறுமுகம் மற்றும் சதீஷை நள்ளிரவில் சரமாரியாக வெட்டிச் சாய்த்தார்.
மேலும் தாங்கள் தான் அந்தப் பகுதியில் பெரிய ஆட்கள் என்று காட்டுவதற்காக, இந்த கொடூரக் கொலையை வீடியோ எடுத்துத் தனது நண்பர்களுக்குப் பகிர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக்கொலை தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட பல்லாவரம் காவல்துறையினர், நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், வரதராஜபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி, முடிச்சூர் அப்பு, சரண்குமார், விஜய், சூர்யா, அபினேஷ், புவனேஷ் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீபக் மற்றும் தலைமறைவாக உள்ள மற்ற சிலரை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
