“கல்யாணம் பண்ணிக்கிறேன்”… ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமி சீரழித்த 30 வயது காமக்கொடூரன்… தேனி நீதிமன்றம் கொடுத்த ‘மரண அடி’ தண்டனை…!!!

By Muthu Mani on சித்திரை 25, 2026

Spread the love

தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு, தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த செல்வம் (35) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். “உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன், இது தவறில்லை” என நம்பவைத்து அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டலும் விடுத்துள்ளார்.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது செல்வம் செய்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கணேசன் இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார்.

   

நீதிபதி தனது தீர்ப்பில், செல்வம் குற்றவாளி என்பதை உறுதி செய்து, போக்சோ திருத்தச் சட்டப் பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 366-ன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் விதித்தார். இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால நலனுக்காக தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளி செல்வம் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.