உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகார் பெரும் மோதலில் முடிந்துள்ளது. இது குறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரீதா ஆர்யாவிற்கும், சமையலர் தேவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
பள்ளிக்கூட வளாகத்திலேயே இருவரும் மல்யுத்தம் செய்வது போன்ற இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்காகச் சமையலர் திட்டமிட்டுச் சதி செய்வதாகவும், கெட்டுப்போன பொருட்களைக் கொண்டு வேண்டுமென்றே உணவு சமைப்பதாகவும் தலைமை ஆசிரியை குற்றம் சாட்டியுள்ளார்.
கல்வி கற்கும் இடத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் மாணவர்களின் மதிய உணவுப் பாதுகாப்பு குறித்தப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
