“உன்னை ரொம்ப பிடிக்கும்” நீ என்னை காதலிக்காவிட்டால்… ரத்தத்தில் எழுதப்பட்ட கடிதம்… இன்ஸ்பெக்டருக்கு லவ் டார்ச்சர் கொடுத்த காங்கிரஸ் பிரமுகர்… கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருபவர் சதீஷ். அந்தப் பகுதியில் வசித்து வரும் சஞ்சனா (38) என்ற காங்கிரஸ் பிரமுகருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது, “உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களைக் காதலிக்கிறேன்; நீங்களும் என்னைக் காதலிக்க வேண்டும்” என்று சஞ்சனா இன்ஸ்பெக்டரிடம் போனில் கூறியுள்ளார்.

முதலில் யாரோ தன்னிடம் விளையாடுவதாக நினைத்து இன்ஸ்பெக்டர் சதீஷ் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். பிறகு அதே எண்ணிலிருந்து அடிக்கடி அழைப்புகள் வந்ததால், அவர் பதில் அளிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெவ்வேறு எண்களில் இருந்து சதீஷைத் தொடர்பு கொண்ட சஞ்சனா, மீண்டும் மீண்டும் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

   
அதன் பிறகு, நேரடியாக ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்திற்கே சென்று சதீஷிற்குச் சஞ்சனா பூச்செண்டுகளை அனுப்பியுள்ளார். மேலும், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் குறுந்தகவல்கள் மூலமாகத் தன்னைக் காதலிக்கும்படித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனக்கு முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை நன்கு தெரியும் என்றும், அதனால் தன்னைக் காதலிக்கும்படியும் அவர் மிரட்டியுள்ளார்.
தன்னைக் காதலிக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததுடன், தனது இரத்தத்தால் எழுதிய கடிதம் ஒன்றையும் சதீஷிற்குக் கொடுத்துள்ளார். சஞ்சனாவின் தொல்லை அதிகரித்ததாலும், மிரட்டல் விடுத்ததாலும் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சதீஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தற்கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சனாவைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சதீஷ் கூறுகையில், “எனக்குக் காதல் தொல்லை கொடுத்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் தனது கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். அவர் எதற்காக எனக்குத் தொல்லை கொடுத்தார் என்று தெரியவில்லை. எனக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.