தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, 84 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில், தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பாரதிராஜா மறைவிற்கு முன்பு இறுதியாக பேசிய ‘என் இனிய தமிழ் மக்களே’ வீடியோ வைரலானது. தற்போது இயக்குநர் கௌதம் மேனனுடனான நேர்காணல் ஒன்றில் பாரதிராஜா தனது சிறுவயது காதல் குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான நினைவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது. வயதான காலத்தில் தனது சிறுவயது காதலியைத் தேனியில் தற்செயலாகப் பார்த்ததையும், அவர் தனது வீட்டிற்கு வந்து சொந்தக் கையால் காபி போட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான தருணத்தையும் “அவ கையால ஒரு கப் காபி.. அங்கேயே என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சு, அதுதான் காதல்” என்று பாரதிராஜா அதில் எமோஷனலாக விவரித்துள்ளார். அவரின் இந்த உருக்கமான பழைய பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
