தர்மபுரியில் தனியார் நிதி நிறுவன ஊழியரான அய்யப்பன் என்பவர், தனது இரண்டாவது மனைவியின் பெண் குழந்தையை உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ள கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டதால், அக்குழந்தை வலியால் துடித்த நிலையில், தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் அறிந்த குழந்தையின் தாய் ரமணி, உடனடியாக மருத்துவமனைக்கு வந்து தனது குழந்தையின் நிலையைக் கண்டு கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை அதிரடியாகக் கைது செய்தனர். பச்சிளம் குழந்தையிடம் இவ்வளவு குரூரமாக நடந்துகொண்ட நபரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
