“102 வயதிலும் குறையாத ஆர்வம்!… முதல்வரின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி நேரில் வந்து வாக்குப்பதிவு… நெகிழவைக்கும் பின்னணி”..!!!

By Muthu Mani on சித்திரை 23, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் பிறந்த ஊராகும். அங்கு வசித்து வரும் முதல்வரின் தாய்மாமாவும், திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு முன்னாள் தலைவருமான கோ.தட்சிணாமூர்த்தி, முதல்வர் ஸ்டாலின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். சிறு வயதில் ஸ்டாலின் தனது தாய்மாமா வீட்டில் தங்கி வளர்ந்ததால், இருவருக்கும் இடையே ஒரு நெகிழ்ச்சியான பாசப்பிணைப்பு உண்டு. முதல்வர் திருவாரூர் வரும்போதெல்லாம் தனது மாமாவைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்; ஒருவேளை முதல்வர் செல்ல இயலாத சூழலிலும், தட்சிணாமூர்த்தி நேரில் சென்று ஸ்டாலினை நலம் விசாரித்துத் திரும்புவார்.

இத்தகைய நெருக்கமான உறவு கொண்ட 102 வயதான தட்சிணாமூர்த்தி, இன்று நடைபெற்ற தேர்தலில் வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் நேரில் வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார். 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி இருந்தபோதிலும், அவர் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட கோயில் திருமாளம் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தார். இவரைப் பற்றி நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நெல்லை முபாரக் பேசுகையில், 102 வயதிலும் அவர் காட்டிய இந்த ஆர்வம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார்.

   

தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 தேர்தலை விட 16.65 சதவீதம் அதிகமாகும். சுமார் 4 கோடி வாக்காளர்கள் இதுவரை தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். கோடை வெயில் கடுமையாக இருந்தபோதிலும், 102 வயது முதியவர் காட்டிய அதே ஊக்கத்துடன் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.