சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ‘பி.எம். ரஹத்’ (PM RAHAT) என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விபத்து நடந்த இடத்தைப் பொருட்படுத்தாமல், காயமடைந்தவர்களுக்கு எந்தவிதமான முன்கூட்டிய கட்டணமும் இன்றி ரொக்கமில்லா சிகிச்சை வழங்கப்படும்.
விபத்து நிகழ்ந்த முதல் ஏழு நாட்களுக்கு அல்லது அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலான சிகிச்சைச் செலவுகளை மத்திய அரசே முழுமையாக ஏற்கும். வருமானச் சான்று அல்லது இதர ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி உயிரைக் காக்க முடியும்.
இந்தத் திட்டமானது ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் விபத்துக்குப் பிந்தைய முதல் சில மணிநேரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய அவசர எண்ணான 112 உடன் இது இணைக்கப்பட்டுள்ளதால், அழைப்பு விடுத்த உடனேயே ஆம்புலன்ஸ் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளை அதிகாரிகள் ஒருங்கிணைத்துவிடுவர்.
மருத்துவமனை நிர்வாகம் தனது செலவீனங்களை காப்பீட்டு நிறுவனம் அல்லது விபத்து நிதியிலிருந்து டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளலாம்; ஒருவேளை காப்பீடு இல்லையெனில், அரசே அந்தப் பணத்தை வழங்கும். இத்திட்டம் ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் பொதுவானது என்பதால், இனி விபத்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நிலை மாற வாய்ப்புள்ளது.
