“ரூ.75,000, ரூ.50,000, ரூ.25,000 பரிசு” ஆன்லைன் குற்றங்களை கண்டறியும் நோக்கில்… தேசிய அளவிலான சைபர் ஹேக்கத்தான் போட்டி நடத்தி அசத்திய சிபிசிஐடி…!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love

பெருகிவரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது, தற்போது மரபுவழித் (Traditional) குற்றங்களிலும் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இணையத்தைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், வழக்குகளை விசாரிப்பதிலும் குற்றங்களைக் கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளைக் களைவதற்கும், டார்க் வெப் (Dark Web) வழியாக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கும் சைபர் துறை வல்லுநர்களின் உதவி இன்றியமையாததாக இருக்கிறது.

புலன் விசாரணையில் இருக்கும் சிக்கலான வழக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை (CB-CID), selfe made ninja academy மற்றும் சவீதா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹாக்கத்தானை (Cyber Hackathon) நடத்தியது. இந்த ஹாக்கத்தானில் இந்தியா முழுவதிலுமிருந்து 2,400 பேர் பதிவு செய்திருந்தனர். டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல்நிலை போட்டிகளில் அவர்கள் பங்கேற்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் 50 அணிகளைச் சேர்ந்த 178 சைபர் வல்லுநர்கள், டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.

   
நிஜக் குற்றச் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 35 சவாலான சிக்கல்களில் (Challenges), அதிகப்படியானவற்றுக்குத் தீர்வு கண்ட முதல் மூன்று அணிகளுக்கு முறையே ₹75,000, ₹50,000 மற்றும் ₹25,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கண்டறியப்பட்ட முடிவுகள் மற்றும் யுக்திகள், தமிழ்நாடு காவல்துறையில் நிலுவையில் உள்ள சிக்கலான வழக்குகளைத் தீர்ப்பதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.