பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அந்தப் போலிப் பத்திரப்பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் எஸ்பி சாஜிதா தலைமையிலான போலீஸ் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக, நிலத்தை முறைகேடாக வாங்கிய பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி என்பவரின் வீட்டைச் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகச் ‘சுத்து’ போட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ் சாமிகள், அதனை வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய மூவரும் தங்களது செல்போன்களை அணைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பத்திரப்பதிவின் போது சாட்சி கையெழுத்திட்ட நபர்களும் தலைமறைவாகியுள்ளதால், அவர்களைக் கைது செய்யப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம், இந்த நில மோசடி தொடர்பாகப் பழனி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று விடிய விடியக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளும் ஆதாரமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், நிலத்தை விற்ற முருகதாஸ் மற்றும் வாங்கிய சேதுபதி ஆகியோரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிபிசிஐடியின் இந்த அதிரடி நடவடிக்கையால், தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை வட்டாரங்கள் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.
