“கருப்பு பட்ஜெட்…” இந்திய பொருளாதாரத்தை உலுக்கிய 1973-74 பட்ஜெட்டின் பின்னணி என்ன…? பலரும் அறியாத தகவல்கள்…!!

By Devi Ramu on தை 22, 2026

Spread the love

இந்திய நிதிநிலை அறிக்கை வரலாற்றில் 1973-74 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் பி. சவான் தாக்கல் செய்த பட்ஜெட் ‘கருப்பு பட்ஜெட்’ என அழைக்கப்படுகிறது. 1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரினால் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியும், ராணுவத்திற்கான அதீத செலவுகளும் திட்டமிட்ட வருமானத்தை விட 550 கோடி ரூபாய் வரை கூடுதல் பற்றாக்குறையை ஏற்படுத்தின. மேலும், பருவமழை பொய்த்ததால் விவசாய உற்பத்தி குறைந்து விலைவாசி விண்ணைத் தொட்டதுடன், வங்கதேச அகதிகளின் வருகையும் நாட்டின் கஜானாவிற்குப் பெரும் பாரமாக அமைந்தது. இத்தகைய இக்கட்டான சூழலால் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் போனதாலேயே இது வரலாற்று ரீதியாக இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டின் போது நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன. கடும் நிதி நெருக்கடியிலும் பாதுகாப்புத் துறைக்கு 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதுடன், அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்குக் கற்பனை செய்ய முடியாத வகையில் 97.75% வருமான வரி விதிக்கப்பட்டது. இவ்வளவு கடுமையான வரிவிதிப்பு முறையும், வரவை மிஞ்சிய செலவினங்களுமே கறுப்புப் பணம் உருவாவதற்கும் பொருளாதார அழுத்தத்திற்கும் முக்கியக் காரணியாக அமைந்தன. சவாலான இந்தச் சூழலில் வேறு வழியின்றித் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட், இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக இன்றும் கருதப்படுகிறது.