திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை அருகே கள்ளக்காதலனால் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த மேகலா (24) என்ற பெண், சென்றான்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் துர்க பிரசாந்த் (28) என்ற இளைஞருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மேகலா வேறொரு நபருடனும் நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த துர்க பிரசாந்த் முதலில் அவரைக் கண்டித்துள்ளார்; பின்னர் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். திட்டத்தின்படி, நேற்று பென்னாலூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டுப் பகுதிக்கு மேகலாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்த பிறகு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு துர்க பிரசாந்த் தப்பியோடியுள்ளார்.
அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த துர்க பிரசாந்தைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மேகலாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மேகலாவின் உடலைக் கைப்பற்றிய பென்னாலூர்பேட்டை போலீஸார், அதனை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
