மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நூதன முறையில் திருமண மோசடி செய்து வந்த ஒரு பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே எட்டு பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிய இந்த ‘கொள்ளை மணப்பெண்’, ஒன்பதாவது முறையாக ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றபோது அவரது மோசடி அம்பலமானது. உமாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரைத் தனது வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை இப்பெண் பறித்துள்ளார்.
இந்த மோசடி கும்பல் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது. பல ஏஜெண்டுகள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட நபரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கணவர், தீர விசாரித்தபோது அவர் ஏற்கனவே எட்டு திருமணங்களைச் செய்து அனைவரையும் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) அணுகிப் புகார் அளித்ததன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி கும்பலில் தொடர்புடைய மற்ற ஏஜெண்டுகளையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
