ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற இளம்பெண், பெங்களூரில் ஐடி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோபி என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் பெங்களூரில் ‘லிவ்-இன்’ முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், திருமணம் செய்வதாக வாக்களித்த கோபி, திடீரென சரஸ்வதியை ஏமாற்றிவிட்டுத் தலைமறைவானார். இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, தனது காதலனைக் கண்டுபிடித்துத் தருமாறு வேலூர் மற்றும் ராமநாதபுரம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பலனளிக்காததால், நேரடியாக ராமநாதபுரத்தில் உள்ள கோபியின் வீட்டைத் தேடி வந்துள்ளார்.
சரஸ்வதி வருவதைக் கண்ட கோபியின் பெற்றோர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறிய நிலையில், அந்தப் பெண் வீட்டின் முன்பே அமர்ந்து கண்ணீர் மல்கத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த கேணிக்கரை போலீசார், ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாதிட்ட சரஸ்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டு விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்றார்.
