உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 8 ஆண்டுகால காதல் உறவு முறிந்த சோகத்தில் துஷார் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துஷார் மற்றும் அவரது காதலி கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் இறுதியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அந்தப் பெண், துஷாரைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த துஷார், வீட்டிற்குத் திரும்பியவுடன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ஜான்சி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துஷாரின் குடும்பத்தினர் அந்தப் பெண் மீது கடுமையான புகார்களை முன்வைத்துள்ளனர். துஷார் தனது காதலியைத் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அந்தப் பெண் மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். துஷாரின் தற்போதைய பொருளாதார நிலை அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுக்காததால், அவர் திருமணத்தை மறுத்துப் பிரிந்துவிட்டதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
