“அட கொடுமையே… பணமா வேணாம்… என் கேம் அக்கவுண்ட்ல டாப்-அப் பண்ணுங்க?… AI மூலம் போலி போட்டோ அனுப்பி… தந்தையை மிரட்டிய சிறுவன்… உ . பி – யில் பரபரப்பு…!”

By Swetha on ஆவணி 13, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது சொந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தான் கடத்தப்பட்டது போல் போலிப் படங்களை உருவாக்கித் தனது தந்தையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளான். மேலும், ரூ 1 லட்சம் பணம் தராவிட்டால் மகனைக் கொன்றுவிடுவதாகவும் அந்தச் செய்தியில் மிரட்டியுள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாகக் காவல் துறையிடம் புகாரளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, வெறும் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்துப் பிடித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அவன் தீட்டிய அனைத்துச் சதித்திட்டமும் அம்பலமானது.

   

இந்தச் சம்பவத்தின் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவனுக்குப் ரொக்கப் பணமாக எதுவும் வேண்டாம் என்று கூறியதுதான். “அந்தப் பணத்தை எனது ஆன்லைன் கேமிங் கணக்கில் ‘டாப்-அப்’ மட்டும் செய்து விடுங்கள்” என்று அவன் அசால்ட்டாகக் கூறியுள்ளான். ஆன்லைன் விளையாட்டுப் போதையால் ஒரு சிறுவன் சினிமா பாணியில் அரங்கேற்றிய நாடகம், இறுதியில் சில மணி நேரங்களிலேயே காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.