தற்கொலைக்கு தூண்டியதாக மணமகன் கைது.. இரவு முழுவதும் காவல் நிலையத்தில் இருந்த சடலம்.. இறுதிச்சடங்கில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் விசித்திர திருமணம்…!!

By Swetha on வைகாசி 18, 2026

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் கிரீடி மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மணமகன் மனிஷ் முர்மு என்பவருக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண் மணமகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பெண் திடீரென விஷம் குடித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது மகளைத் திருமண ஆசை காட்டி மனிஷ் முர்முவின் குடும்பத்தினர் தொடர்ந்து சித்திரவதை செய்ததாகவும், அந்த கொடுமை தாங்காமலேயே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகன் மனிஷ் முர்முவை உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்தனர். இதற்கிடையில், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெண்ணின் உடலை வாங்க இருதரப்பு குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பெண்ணின் உடல் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டது. அடுத்த நாள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண்ணின் உடல் இளைஞரின் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

   

அங்கு இறுதிச் சடங்கிற்கு முன்பாக, மணமகனின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களின் பிடிவாதத்தின் காரணமாக, போலீஸ் காவலில் இருந்த மனிஷ் முர்மு அங்கு அழைத்து வரப்பட்டார். காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் முன்னிலையிலேயே, உயிரிழந்த தனது வருங்கால மனைவியின் நெற்றியில் மனிஷ் குங்குமம் இட்டு, சடங்கு பூர்வமாகப் பிணத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த விசித்திர திருமண சடங்கு முடிந்த பிறகே பெண்ணின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண்ணின் மரணத்திற்கான உண்மை காரணத்தை அறிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.