“வேட்பாளரை துரத்தி துரத்தி அடித்த கும்பல்!.. உயிருக்கு பயந்து ஓடிய பாஜக வேட்பாளர்”… பதறவைக்கும் வீடியோ… மேற்கு வங்கத்தில் பற்றி எரியும் தேர்தல் களம்…!!!

By Muthu Mani on சித்திரை 23, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குமார்கஞ்ச் தொகுதியில், தேர்தல் களத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பாஜக ஏஜென்ட்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கிடைத்த தகவலையடுத்து, பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் அங்கு நேரில் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த கும்பல், வேட்பாளர் மற்றும் அவரது பாதுகாவலர்களைக் கற்கள் மற்றும் கட்டைகளால் கடுமையாகத் தாக்கியது. உயிர் பயத்தில் அவர் அங்கிருந்து தப்பி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள சுவேந்து சர்க்கார், தோல்வி பயம் காரணமாகவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இத்தகைய தாக்குதல்களை முன்னெடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 8 முதல் 10 வாக்குச்சாவடிகளில் பாஜக முகவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், தான் தலையிட்டு அவர்களை மீண்டும் உள்ளே அனுப்பியதால் ஆத்திரமடைந்த குண்டர்கள் தன்னைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

   

குமார்கஞ்ச் பகுதியில் நடந்த மோதலில் காயமடைந்த பாஜக ஏஜென்ட் பிஸ்வஜித் மண்டல் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ள நிலையில், பதற்றம் நிலவும் லவ்பூர் மற்றும் குமார்கஞ்ச் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, முர்ஷிதாபாத் பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால் வன்முறை வெடித்தது. சிவநகர் ஆரம்பப் பள்ளி அருகே நடந்த இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

   

மேற்கு வங்கத் தேர்தலின்போது தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய மோதல்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சோதிப்பதாக அமைந்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ஹுமாயூன் கபீர் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் விடிய விடிய நீடித்தது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் வேளையில் வேட்பாளர்கள் தாக்கப்படுவதும், பூத் கேப்சரிங் புகார்கள் எழுவதும் அம்மாநிலத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. தற்போது பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.