மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள விலாஸ்ராவ் தேஷ்முக் சாலையில், கூரியர் நிறுவன ஊழியர் ஒருவர் வாகனத்திலிருந்து பார்சலை கீழே இறக்கியபோது எதிர்பாராதவிதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின் கோரக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஊழியர், உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து உடனடியாக களமிறங்கிய உள்ளூர் காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பார்சலை கையாளும்போதே இந்த அசாம்பாவிதம் நிகழ்ந்துள்ளதால், அந்தப் பொட்டலத்திற்குள் ஆபத்தான வெடிபொருட்கள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா அல்லது வேதிப்பொருட்களின் எதிர்வினையால் இந்த விபத்து நேரிட்டதா என்ற கோணங்களில் அதிகாரிகள் முழுவீச்சில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
