இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ‘பாரத் ஏபிஐஎஸ்’ என்னும் ஓப்பன் சோர்ஸ் பயோமெட்ரிக் முறை, ஆதார் அட்டையில் உள்ள போலி மற்றும் இரட்டை அடையாளங்களைக் கண்டறிந்து நீக்குவதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகத் திகழ்கிறது. கோடிக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய தரவுத்தளங்களை மிக விரைவாகவும் துல்லியமாகவும் ஆய்வு செய்யும் வகையில் இந்த முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் முதன்மை சிறப்பு அதன் மல்டி-மாடல் பயோமெட்ரிக் தொழில்நுட்பமாகும். இது தனிநபரின் கைரேகை, ஐரிஸ் மற்றும் முக அடையாளம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஒரு ‘ஒற்றை டெம்ப்ளேட்டாக’ மாற்றுகிறது. சுமார் 220 மில்லியன் பதிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட கள ஆய்வுகளில், இது தற்போதைய வணிக ரீதியிலான மென்பொருள்களை விட மிகக் குறைந்த பிழை விகிதத்துடனும், அதிக துல்லியத்துடனும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பம் இந்தியாவிற்கு மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, சொந்தமாகப் பெரிய பயோமெட்ரிக் அமைப்புகளை உருவாக்க வசதியில்லாத உலகளவில் உள்ள சுமார் 160 சிறிய நாடுகளுக்குத் தங்களது குடிமக்களுக்கான டிஜிட்டல் அடையாள அமைப்பை உருவாக்க இந்த ‘பாரத் ஏபிஐஎஸ்’ பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
