35 கோடி பட்ஜெட்டில் படமாகும் பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு… இயக்குனர் சேரனுக்காக போட்டியாக மற்றொரு இயக்குனரா..??

By Nanthini

Published on:

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக அவரின் மகன் அன்புமணி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கீழ்விசிறி என்ற கிராமத்தில் 1939 ஆம் ஆண்டு சஞ்சீவி ராய கவுண்டர் மற்றும் நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தவர்தான் பாமக நிறுவனர் ராமதாஸ். இவர் சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அன்புமணி என்ற மகனும் ஸ்ரீகாந்தி மற்றும் கவிதா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

   

முதலில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த ராமதாஸ் தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையை பற்றி சிந்தித்த நிலையில் அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்பதற்காக வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசித்தார்.

பிறகு வன்னியர் சங்கம் என்ற புதிய அமைப்பை 1980 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு பல போராட்டங்களில் ஈடுபட்டார். இவரின் ஆரம்ப கால செயல்பாடுகள் அனைத்தும் அனைவராலும் பாராட்டப்பட்டன. ஆனால் காலப்போக்கில் அவரின் செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட தொடங்கியது. இப்படி படிப்படியாக அரசியலில் நுழைந்த ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக அவரின் மகன் அன்புமணி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை சுமார் 35 கோடி பட்ஜெட்டில் படமாக முடிவு செய்துள்ள நிலையில் இந்த படத்தை இயக்க இயக்குனர் சேரன் அன்புமணியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். அதே சமயம் இயக்குனர் தங்கர்பச்சனும் இந்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் விரைவில் இவர்களில் யாராவது ஒரு இயக்குனரை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது.

author avatar
Nanthini