பெங்களூருவில் பெண் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்றபோது, அந்த ஓட்டுநர் தனது செல்போனை ஸ்டீயரிங் அருகில் வைத்துத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே வாகனத்தை ஓட்டியுள்ளார். அந்தப் பெண் பலமுறை எச்சரித்தும், வீடியோவைப் பார்க்க வேண்டாம் என்று கெஞ்சியும்கூட, அந்த ஓட்டுநர் அதைக் காதில் வாங்காமல் வீடியோ பார்ப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். ஓட்டுநரின் இந்த பொறுப்பற்ற செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
was in an auto the other day and the driver kept watching short videos while driving
not occasionally watching, this dude was locked in busy scrolling and not really paying attention to the road
at one point, a truck ahead of us started reversing, he didn’t notice and i had to… pic.twitter.com/dRVrJb3vJm
— Aakanksha (@aakancvedi) March 24, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அந்த ஆட்டோ ஓட்டுநரை அடையாளம் கண்டு, போக்குவரத்திற்கு இடையூறாகவும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. “அவர் ரீல்ஸ் பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டார்” என்று அந்தப் பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள நிலையில், சாலையில் செல்லும்போது இதுபோன்ற கவனச்சிதறல்கள் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன.
இந்தச் சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு போன்ற நெரிசலான சாலைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் அலைபேசியைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகவும், இது போன்ற செயல்கள் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்பத்தின் மீதான அதிகப்படியான மோகம், ஒருவரின் கடமையையும் பிறரின் உயிரையும் எப்படிப் பாதிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
