சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர் ஒருவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ (DPI) வளாகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 181-வது வாக்குறுதியான ‘பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்’ என்பதை நிறைவேற்றக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தைத் தொடர்ந்து, ஆசிரியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பகுதிநேர ஆசிரியர், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாத விரக்தியில் திருமண மண்டபத்திலேயே வார்னீஷ் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
