அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டின் குடியேற்ற விதிகளில் தொடர்ந்து பல்வேறு கடுமையான மாற்றங்களைச் செய்து வருகிறது. தொடக்கத்தில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீது கவனம் செலுத்திய டிரம்ப் அரசு, தற்போது சட்டப்பூர்வமாகப் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் விசா நடைமுறைகளையும் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணியமர்த்தப் பயன்படுத்தும் புகழ்பெற்ற H-1B மற்றும் PERM விசா திட்டங்களில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அமெரிக்கத் தொழிலாளர் துறை இப்போது அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது.
இந்த விசா மோசடி விசாரணையின் கீழ், முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கத் தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆன்டனி டி’எஸ்போசிடோ உறுதிப்படுத்தியுள்ளார். சில நிறுவனங்களும் ஏஜெண்டுகளும் போலியான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குவது மற்றும் சம்பளத்தைச் சுரண்டுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விசா மோசடிகள் வெறும் வேலைவாய்ப்புச் சிக்கல் மட்டுமல்லாமல், சர்வதேச குற்றவியல் நெட்வொர்க் மற்றும் கடத்தல் கும்பல்களுடனும் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், டிரம்ப்பின் சிறப்பு டாஸ்க் போர்ஸ் இந்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் H-1B விசாவைப் பெற்று அமெரிக்காவில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்திய ஐடி வல்லுநர்களே மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இத்தகையச் சூழலில், டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்தத் திடீர் மற்றும் தீவிரமான நடவடிக்கை, அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கும் அங்குப் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்திய ஊழியர்களுக்கும் பெரும் கலக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
