ஸ்பேஸ்X நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகத்தைத் தொடர்ந்து, எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக உயர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவரது தொழில் நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, மஸ்க்கின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தற்போது 1.1 டிரில்லியன் டொலரைக் கடந்துள்ளது. பல்லாயிரம் கோடி டாலர்களுக்கு அதிபதியாக இருந்தபோதிலும், அவர் ஆடம்பரமான வாழ்க்கை முறையைத் தவிர்த்து முற்றிலும் எளிய முறையையே பின்பற்றி வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கலிபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் மாநிலத்திற்கு மாறிய எலான் மஸ்க், அங்கு தனக்குச் சொந்தமாக இருந்த பல ஆடம்பர சொத்துக்களை விற்பனை செய்துவிட்டார். தற்போது டெக்சாஸில் உள்ள போகா சிகா பகுதியில், ‘BOXABL’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் வடிவமைத்த வெறும் 400 சதுர அடி மட்டுமே கொண்ட ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்து வருகிறார். ஒரு வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் படுக்கையறை மட்டுமே கொண்ட இந்த வீடு ஸ்பேஸ்X நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதால், அதற்காக அவர் நிறுவனத்திற்கு மாதந்தோறும் வாடகையும் செலுத்தி வருகிறார்.
எலான் மஸ்க் தனது நிறுவனங்களின் உற்பத்தித் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, தினமும் தொழிற்சாலை வளாகத்திலேயே தங்கி உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அண்மையில் இவரது தாயார் மே மஸ்க் மகனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் உண்பதற்கு உணவு கூட இல்லை என்று தெரிவித்துள்ளார். உலகின் ஆகச்சிறந்த கோடீஸ்வரராக இருந்தாலும், தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் இந்த எளிய வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
