அமெரிக்க வெள்ளை மாளிகை, கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள 30 நாள் கால அவகாசம் (Grace Period) குறித்து சமீபத்தில் விளக்கமளித்துள்ளது. “இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் நல்ல நடிகர்கள்” (Good Actors) என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கப்பல்களில் ஏற்றி தயாராக இருக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றுக்கொள்ள அமெரிக்கா இந்த தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுடனான மோதல் போக்கு அதிகரித்து வருவதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குறுகிய கால சலுகை ரஷ்யாவிற்கு பெரிய அளவில் பொருளாதாரப் பயனைத் தராது என்றும், உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப், கருவூல செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவினர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாலேயே, தற்போது இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், “நல்ல நடிகர்கள்” மற்றும் “அனுமதி” (Permission) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் இறையாண்மையை இது சிறுமைப்படுத்துவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
