முட்டு கொடுக்க முடியாது முதல்வரே..!பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் CM விஜய் மீது.. தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் அதிருப்தி..!

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளரும், உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான அருள் ஆறுமுகம் கட்சியின் தலைமைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள இந்தத் திட்டம் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அருள் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலின் போது விவசாயிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளிக்கவில்லை, மாறாக ‘உத்தரவாதம்’ கொடுத்தார் என்பதை நினைவூட்டியுள்ளார். தற்போதைய அரைகுறை மற்றும் பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம் என்றும், இது தவெக மீது மக்கள் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் 50% கடனையாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

   

மேலும், முதலமைச்சர் விஜய்க்கு விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது என்றும், கள யதார்த்தம் புரியாத ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இதுபோன்ற தவறான முடிவுகளை அரசு எடுக்கக் கூடாது என்றும் சாடியுள்ளார். நிதிப் பற்றாக்குறை இருந்தால், தேர்தல் வாக்குறுதிப்படி ஒட்டுமொத்தத் தள்ளுபடியை முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நிதியை விடுவித்திருக்கலாம் என்றும், அதை விடுத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரைகுறை திட்டம் விவசாயிகளிடம் தவெக அரசு மீது பெரும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும் என்றும் அருள் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.