வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் (பிப்ரவரி 23, 2026) பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும்போது ஒரு கட்டத்தில் கண்கலங்கினார். தன் மீது வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “என்னை அவதூறாகப் பேசுவது என்பது, மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு சமம். விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல; நாங்கள் ரத்தமும் சதையும் போல, உடலும் உயிரும் போல பின்னிப் பிணைந்தவர்கள்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய அவர், “என்னை யாராவது அசிங்க அசிங்கமாகப் பேசினால், அது இந்த மக்களை அசிங்க அசிங்கமாகப் பேசுவது போன்றது” என்று கூறி நெஞ்சைத் தொட்டு நெகிழ்ந்தார். விஜய்யின் இந்தத் திடீர் உணர்ச்சிவசப்பட்ட நிலையும், அவர் கண்கலங்கிய சம்பவமும் அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
