சென்னை முகப்பேர் மேற்கு திருமங்கலம் அருகில் உள்ள குடிசை வீடு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பூ வியாபாரம் செய்துவரும் பெண் ஒருவரின் வீட்டின் உள்ளே அவரது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண் உடனடியாக வெளியேறிய நிலையில், தீ மளமளவெனக் குடிசை முழுவதும் பரவியது.
சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்த இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்தச் சத்தத்தைக் கேட்டு வீட்டின் அருகே உள்ள CSI தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஜே.ஜே. நகர் நிலையங்களிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 1.60 லட்சம் ரூபாய் ரொக்கம் முழுமையாக எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
