பிரபல நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது முதல் காதல் குறித்து தான் பேசினால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துவிடும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் காதலைப் பற்றி வெளியில் சொல்லாமலேயே பல ஆண்டுகளைக் கடந்துவிட்டதாகவும், இந்த ரகசியம் தனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் மட்டுமே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வனிதாவின் இந்த திடீர் ஓப்பந்தம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற யூகம் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வனிதா எப்போதுமே தன் மீதான கவனத்தைத் திருப்புவதற்காகவும், விளம்பரத் தேடலுக்காகவும் இல்லாத ஒரு விஷயத்தைப் பேசி விவாதமாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். வனிதாவின் முதல் திரைப்படமான ‘சந்திரலேகா’வில் (1995) அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் விஜய் என்பதால், பலரும் வனிதாவின் பேச்சை அவரோடு இணைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் விஜய் மீது, திட்டமிட்டு ஒரு எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பப்ளிசிட்டி தேட வனிதா முயல்கிறார் என்று செய்யாறு பாலு அப்பட்டமாகச் சாடியுள்ளார். வனிதாவின் முதல் காதலுக்கும் சந்திரலேகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தமிழக முதலமைச்சரின் பெயரைக் குறிவைத்து விளம்பரம் தேடும் வனிதாவின் இந்த அணுகுமுறை நாகரீகமான விஷயம் கிடையாது என்றும் பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
