பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா-இsரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் மூண்டது. இதன் விளைவாக, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. உலக கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி தேவையில் ஐந்தில் ஒரு பங்கை பூர்த்தி செய்யும் இப்பாதை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $105 வரை உயர்ந்து, இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.
கடந்த சில வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது நிலைமை சற்று மாறியுள்ளது. கடல்சார் கண்காணிப்பு நிறுவனமான கெப்ளரின் தரவுகளின்படி, ஒரு வாரத்திற்கு வெறும் 19 கப்பல்கள் மட்டுமே கடந்து வந்த நிலை மாறி, தற்போது வாரத்திற்கு சராசரியாக 55 கப்பல்கள் கடந்து செல்லும் அளவிற்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. மே 11 முதல் 17 வரையிலான காலகட்டத்தில், ஈரான் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி டாங்கர்கள் உட்பட பல கப்பல்கள் செல்ல அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சூழல் முழுமையான அமைதியைக் குறிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி இனி ஒருபோதும் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பாது என்று ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். மேலும், இப்பாதையைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கவும் ஈரான் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கையாலும், சுங்க கட்டண உயர்வு அச்சத்தாலும், பல கப்பல் நிறுவனங்கள் தங்கள் பயண விவரங்களை மறைத்துச் செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஹார்முஸில் கப்பல் போக்குவரத்து மீண்டும் அதிகரித்துள்ளது, கச்சா எண்ணெய் விலையால் தவித்து வரும் ஆசிய நாடுகளுக்குத் தற்காலிக நிவாரணத்தை அளித்திருந்தாலும், இது ஒரு நிரந்தரத் தீர்வல்ல. ஈரானின் புதிய கட்டுப்பாடுகளும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடாப் பகுதியில் முழுமையான அரசியல் மற்றும் ராணுவ அமைதி திரும்பினால் மட்டுமே உலகப் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்பதே நிதர்சனமாகும்.
