தமிழ் திரையுலகில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர் சத்யராஜ். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை பற்றி சத்யராஜ் பேசி இருக்கிறார். அதாவது, சத்யராஜ் அவர்கள் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து, அவரது சினிமா வாழ்க்கை ஒரு சரிவை நோக்கிச் சென்ற காலகட்டத்தில், விஜய், அஜித் மற்றும் சூர்யா போன்ற இளம் நடிகர்கள் வளர்ந்து வந்தனர். அந்தச் சமயத்தில் ஒரு முன்னணி வார இதழில் விஜய்யின் நேர்காணல் ஒன்று வெளியானது. அதில், “நடிக்க வருவதற்கு உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?” என்ற கேள்விக்கு விஜய் மிகவும் வெளிப்படையாகப் பதிலளித்திருந்தார்.
அதில் பேசிய விஜய், தனக்கு எந்த ஒரு வசனம் கொடுக்கப்பட்டாலும், அந்த டயலாக்கை “சத்யராஜ் சார் எப்படிப் பேசுவார்?” என்று தான் முதலில் மனதிற்குள் நினைத்துப் பார்ப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சத்யராஜின் திரைவாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த ‘அமைதிப்படை’ படத்தின் ‘அமாவாசை’ போன்ற ஒரு வலிமையான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் ஆசை என்றும் அந்தப் பேட்டியில் விஜய் தெரிவித்திருந்தார்.
தனது சினிமா மார்க்கெட் இறங்குமுகத்தில் இருந்தபோது, வளர்ந்து வரும் ஒரு இளம் நட்சத்திரமான விஜய், தன்னை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்டுப் பேசியது சத்யராஜுக்குப் பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. இதனால் நெகிழ்ந்துபோன சத்யராஜ், உடனடியாக விஜய்க்குத் தொலைபேசி வாயிலாக அழைத்து தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தற்போது அரசியல் ரீதியாக இருவரும் மாறுபட்ட துருவங்களில் இருந்தாலும், இந்த பழைய நினைவை சத்யராஜ் தற்போதும் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
