ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே முதற்கட்ட அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுமையான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் கட்டப் போட்டிகள் ஏப்ரல் 13-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் ஆரம்பமாகிறது. லீக் சுற்றின் மீதமுள்ள 50 போட்டிகள் மே 24-ஆம் தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 நகரங்களில் நடைபெறவுள்ளன.
இந்த சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ‘எல் கிளாசிகோ’ போட்டிகள் ஏப்ரல் 23 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இரண்டாம் கட்டத்தில் மொத்தம் எட்டு ‘டபுள் ஹெடர்’ ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பிற்பகல் போட்டிகள் 3:30 மணிக்கும், இரவு போட்டிகள் 7:30 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றின் கடைசிப் போட்டி மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டி மே 31-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மார்ச் 28-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
