“10 வருஷமா காலை பிடிச்சு, காதை கடிச்சு”.. எடப்பாடி பழனிசாமியிடம் விஜயபாஸ்கர் செய்த ‘அந்த’ காரியம்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய உதயகுமார்..!!

By Muthu Mani on ஆனி 17, 2026

Spread the love

அ.தி.மு.க.விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று அதிரடியான வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க. மூலம் முகவரியும் அதிகாரமும் பெற்று, சுகபோகங்களை அனுபவித்துவிட்டு, கட்சிக்குச் சோதனை வந்த நேரத்தில் சுயநலத்திற்காகக் கட்சியை விட்டு ஓடுவது வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்ற துரோகம் என்று அவர் சாடியுள்ளார். மேலும், அ.தி.மு.க.வில் சேருவதற்கு முன்பு விஜயபாஸ்கர் குடும்பத்திற்கு இருந்த சொத்துகளையும், கட்சியில் இருந்தபோது சேர்த்த சொத்துகளையும் முதலீடுகளையும் அ.தி.மு.க.விற்கு எழுதி வைத்துவிட்டு அவர் வேறு கட்சிக்குச் செல்லத் தயாரா என்று தொண்டர்கள் எதிர்பார்ப்பதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயபாஸ்கர் தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தனது முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளவுமே அ.தி.மு.க.வைக் காட்டிக் கொடுத்துவிட்டு ஓடியுள்ளார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் காதைக் கடித்து, காலைப் பிடித்துப் பதவிகளை அள்ளிய விஜயபாஸ்கர், இப்போது தோல்வி நேரத்தில் தலைமை சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை என்று அவதூறு பரப்புவது நாடகம் என்றும் விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் இத்தகைய துரோகிகளைச் சும்மா விடாது என்றும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் அடிமட்டத் தொண்டர்கள் கொதித்து எழுந்தால் விஜயபாஸ்கர் போன்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

   

த.வெ.க. அவ்வளவு நல்ல கட்சி என்றால் ஏன் தேர்தலுக்கு முன்பாக அதில் இணையவில்லை என்றும், தேர்தல் முடிந்த பிறகு இப்போது இணைவதன் மர்மம் என்ன என்றும் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். சொந்தக் கட்சியில் ஜெயித்தால்தான் மதிப்பு என்றும், அடுத்தக் கட்சியில் போய் அமைச்சரானால் மதிக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயநலத்திற்காகக் கட்சி தாவும் இத்தகைய போக்குகள் இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின்கீழ் சாமானியத் தொண்டர்களை நம்பியே அ.தி.மு.க. இயங்குகிறதே தவிர, இவரைப் போன்ற துரோகிகளை நம்பி இல்லை என்றும் தனது வீடியோ பதிவில் ஆர்.பி.உதயகுமார் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.